headlines

img

இனிது, இனிது, இலக்கணம் இனிது!

பொதுவாகவே இலக்கியத்தை விரும்பும் பலரும் கூட இலக்கணத்தை விரும்பிப் படிப்பதில்லை. காரணம் அதைப் புரிந்துகொள்வது சிரமம் என்ற கற்பிதம் தான். ஆனால் எதையுமே எளிமையாகவும் புரியும் வகையிலும் சொல்லிக் கொடுத்தால் எத்தகைய கடுமையான விஷயமும் மனதில் பதிந்துவிடும்.தமிழ் இலக்கணம் என்றால் தொல்காப்பியம்,நன்னூல் என்று மேற்கோள் காட்டி மாணவர்களைஅச்சமூட்டி விடுவர் தமிழாசிரியர் எனக் கருதுகிறோம்.இதுவே பொதுவான மனநிலையாக உள்ளது. எழுத்து, அசை, சீர், அடி, தொடை, அணி இலக்கணம்பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்கு தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களை மேற்கோள் காட்டுவது அவசியம் தான். ஆயினும் அதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் செய்யுட்கள், பாடல்கள் பலவகையான இலக்கியங்களில் இருந்து பயன் படுத்தப்படும். அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதும் அந்தப் பாடல்களின் இலக்கிய நயம்பற்றி எடுத்துரைத்து அவற்றில் எத்தகைய இலக்கணங்கள் காணக்கிடைக்கின்றன என்பதை எடுத்துரைப்பதும் ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகின்றது.

சங்க இலக்கியப் பாடல்களோ, திருக்குறள், சிலப்பதிகாரம், தேவார, திருவாசகம், பாரதி, பாரதிதாசன் பாடல்களையோ பயன்படுத்தி அணி நயங்களைக் கூறுவது பயிலும் எல்லோருக்கும் ஈர்ப்புடையதாக அமைந்திடுவதில்லை. ஆனால் பொதுவாக எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளவும் மனதில் தங்கும் வகையிலும் அவர்கள் அடிக்கடி காதில்கேட்டுப் பழகிய திரைப்படப்பாடல்களைப் பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று வித்தியாசமாக யோசித்திருக்கிறார் அலசி மை. இராசா கிளைமாக்சு. விளைவு ‘இனிக்கும் தமிழ்’ நூல் நமக்கு கிடைத்திருக்கிறது. அவருடன் கு.ரெ.மஞ்சுளாவும் இணைந்து படைத்திருக்கும் இந்த இனிக்கும் தமிழ் நூல் அவர்களது நோக்கத்தை அடைவதற்கு உதவிகரமாகவே அமைந்திருக்கிறது. 
இந்த நூல் தமிழை பிழையின்றி எழுதவும் பாடல்களில் அமைந்திருக்கும் இலக்கண வகைகளைப் புரிந்து கொள்ளவும் மிகமிக எளிய வகையில் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களும் அவற்றுக்கு கொடுத்திருக்கும் விளக்கங்களும் துணைபுரிவதாகவே இருக்கின்றன. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர்ம.திருமலை, முனைவர் இரா.மோகன் ஆகியோரின்அணிந்துரையும் மதிப்புரையும் அவற்றை தெளிவாக்குகின்றன. அத்துடன், “இலக்கணம் - அதுவெல்லமென இனிப்பதும் வேம்பெனக் கசப்பதும் அதனைக் கற்பிக்கும் பாங்கைப் பொருத்தது. இலக்கணச் செய்திகளை இனிக்க இனிக்க உளத்துள் ஊட்டல் இயலும் என்பதை நிறுவுவதும் இந்நூலின் நோக்கங்களுள் ஒன்று” என்று நூலாசிரியர் அலசி மை. இராசா கிளைமாக்சு கூறியிருப்பதும் கருத்தில்கொள்ளத்தக்தக்கதாகும். 

ஒரு சொல் எப்படி உருவாகியிருக்கிறது என்பதை மிக அழகாக விளக்குவது நம் மனதில்பதியும் வகையில் அமைந்திருக்கிறது. புளி + காய் = புளிக்காய் என்று எழுதினால், சொன்னால்நன்றாகவா இருக்கிறது. புளி + அம் + காய் = புளியங்காய் என்றால் தானே இனிமையாக இருக்கிறது என்று நூலாசிரியர் கேட்பது பொருத்தமாகத் தானே உள்ளது. ‘அம்’ சாரியை எங்கெங்கு பயின்று வருகிறது. எப்படி எல்லாம் இயைந்து, இணைந்து வருகிறது என்று விளக்குகிறது அம்மம்மா... என்னே உன் ஆழம்! கட்டுரை. இந்தநூலில் உள்ள 22 கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை எத்தகைய பொருட்களை உணர்த்துகின்றன என்று நாம் காணலாம். மான் ஆன மகன் எனும் கட்டுரையில் பெருமகன், பெயரன், பெயர்த்தி ஆகியவை பெருமாள், பேரன், பேத்தி என்று ஆவது எப்படி என்பதை விளக்கியிருப்பது நமக்கு பொருத்தமாகத்தான் படுகிறது. வல்லினம் எங்கு மிகும் என்பதை மிகவும் பாந்தமாக எடுத்துரைத்திருக்கிறது இந்நூல். உடம்படுமெய் எனும் இலக்கணம் எப்படி பெயர் பெற்றது என்று விவரிப்பது சிறப்பு.

திரைப்படப் பாடல்களின் மூலம் உருவகம், உவமை அணி, மடக்கணி பற்றி விளக்குவதும் அழகாக உள்ளது. பிறமொழிச்சொற்கள் என நாம் நினைக்கும் பல சொற்கள் தமிழ்ச்சொற்கள் தான் என்று விளக்குவதும் கூட பொருத்தமாகவே தெரிகிறது. ஆயினும் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தாமல் தனித் தமிழில் எழுதுவதே சிறப்பெனக் கருதும் நூலாசிரியர் இந்நூலையும் அவ்வாறே எழுதியுள்ளார்.ஒற்று எங்கெங்கு வரவேண்டும்? வந்தால் சரியாகஇருக்கும்? எங்கு வந்தால் தவறு? என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். பட்டகடன் என்பதேசரி. பட்டக்கடன் என்பது சரியல்ல என்று நமக்கு உணர்த்துகிறார்.ஒருமை, பன்மை விகுதி பற்றியும் அஃறிணை ஒருமை, பன்மை விகுதி பற்றியும் உயர்திணை ஒருமை, பன்மை விகுதி பற்றியும் பலவின்பால் விகுதி பற்றியும் விளக்குவது சிறப்பு. நமது உச்சரிப்பில் நகர, னகர வேறுபாடு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அதன் ஒலிப்பு முறைகளை விளக்கியிருப்பதும் அருமை. இந்நூலில் உள்ள 22 கட்டுரைகள் பற்றியும்விளக்குவது எனில் இக்கட்டுரையே நீண்டுவிடும். இந்த நூல் பரவலாக தமிழ் மக்களிடம் சென்றுசேருவது தமிழுக்கும் தமிழகத்துக்கு பயனுடைத்து. ஆசிரியரின் தமிழார்வம் அவரை பல்வேறு நூல்களைபடைக்கவைத்திருக்கிறது. மேலும் பல நூற்களைப்படைத்து அவரும் வளரட்டும் ; தமிழும் வளரட்டும்.இலக்கணம் எளிது இனிது என்று வாழ்த்தட்டும். 

நூலாசிரியர்: அலசி மை. இராசா கிளைமாக்சு, 
கு.ரெ.மஞ்சுளா
வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை - 17 
பக்கம்: 138, விலை: ரூ.140

====ப.முருகன்====

;